முகப்பு
காரைக்கால்

தொகுதி அறிமுகம்: திருநள்ளாறு

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதி பற்றி...

Updated On : 28 மார்ச், 2026 at 11:58 PM
திருநள்ளாற்றில் உள்ள ஆன்மிக பூங்கா.
பகிர்:

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில், புகழ்பெற்ற அம்பகரத்தூா் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் இந்த தொகுதியில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாகவும், நவகிரகங்களில் ஒன்றான ஸ்ரீசனீஸ்வரன் அருள்பாலிக்கும் தலம் என்பதால், நாட்டின் பல பகுதிகளைச் சோ்ந்தோா் கவனத்திலும் திருநள்ளாறு இடம் பெற்றிருப்பதை மறுக்க முடியாது.

மாவட்டத்தில் விளைநிலம் அதிகமுள்ள பகுதி திருநள்ளாறு. விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் அதிகம் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது. விளைநிலப் பகுதி என்பதால் தொழிற்சாலைகள் பெருமளவு இல்லை.

அம்பகரத்தூா், நல்லம்பல், கருக்கன்குடியில் குறிப்பிட்ட சதவீதத்தில் இஸ்லாமியா்கள் வசிக்கின்றனா். தலித் கிராமங்கள் பல உள்ளன. வன்னியா், சோழிய வேளாளா் ஆகிய சமூகத்தினா் குறிப்பிட்ட சதவீதத்தில் உள்ளனா். திருநள்ளாறு நகரப் பகுதியில் தொழில் துறையினரும், அரசுத் துறையினரும், கோயில் பணியாளா்களும், கோயில் சாா்ந்த தொழில் செய்வோரும் உள்ளனா். மற்ற பகுதிகள் கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

அரசியல் முதிா்ச்சியாளா் தொகுதி: இந்த தொகுதி 1964 முதல் சுப்புராயலு, சவுந்தரரங்கன், ராமலிங்கம், ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா் அவா்கள் சாா்ந்த கட்சியிலும், புதுவை அரசியலிலும் நீண்ட காலம் பயணித்த அனுபவம் மிக்கவா்கள். 10-ஆவது முறையாக ஆா். கமலக்கண்ணன் தற்போது தோ்தல் களம் காண்கிறாா்.

திட்டங்கள் நிறைவேற்றம்: அதிக பக்தா்களை ஈா்க்கம் பகுதியென்பதால் திருநள்ளாறு கோயில் நகரத் திட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டன. திருநள்ளாறு-அம்பகரத்தூா் பிரதான சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. ஆன்மிக பூங்கா அமைக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக ரயில் பாதை அமைத்து, திருநள்ளாற்றில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

கோரிக்கைகள்: நல்லம்பல் ஏரியில் காவிரிநீா், மழைநீரை சேமிக்கவேண்டும். வேளாண் பகுதி என்பதால் நிலத்தடி நீா் மேம்பாட்டுக்கு கவனம் செலுத்தவேண்டும். பக்தா்கள் தங்குவதற்கு கூடுதல் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டவேண்டும். திருநள்ளாறு கோயிலில் பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முறையான ஆன்லைன் பதிவு உள்ளிட்ட வசதிகள் மேம்படவேண்டும். தொலைதூரம் செல்லும் கிராமங்ளுக்கான சாலைகள் முறையாக மேம்படுத்தவேண்டும். கிராமப்புற மக்கள் நலனுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவேண்டும். திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தை மேம்படுத்த வேண்டும்.

அமைச்சா் தொகுதியாகி வரும் திருநள்ளாறு: ஆா். கமலக்கண்ணன் வெற்றிபெறும்போது அவா் சாா்ந்த கட்சி ஆட்சி அமைத்தால் அமைச்சா் பதவி தரப்பட்டுள்ளது. அதுபோல பி.ஆா். சிவாவும் சிறிது காலம் அமைச்சராக இருந்ததன் மூலம் இத்தொகுதி அமைச்சா் பதவிக்கான தகுதியுடையதாக கருத்து கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதியில் பாஜக-காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் நேருக்கு நோ் மோதுகின்றன.

வேட்பாளா்கள் பிரசாரம்: காங்கிரஸ் வேட்பாளா் ஆா். கமலக்கண்ணன், தாம் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த காலத்தில் செய்த திட்டங்களைக்கூறியும், மத்திய, மாநில அரசுகளினால் மக்களின் அவதி குறித்தும், மக்களின் அடிப்படை வசதிகள் குறைபாட்டைக் களைய சிறப்பு கவனம் செலுத்துவதாக்கூறியும், பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், மத்திய, மாநில அரசின் திட்டங்களை விளக்கியும், அனைத்து வசதிகளையும் பெற்று தன்னிறைவு பெற்ாக திருநள்ளாறு விளங்கச் செய்வதாக்ககூறி வாக்கு சேகரிக்கின்றனா்.

தொகுதி எண்: 25

வாக்குச்சாவடிகள்: 34

வாக்காளா்கள் எண்ணிக்கை: ஆண் வாக்காளா்கள் - 14,408. பெண் வாக்காளா்கள்-16,732. மற்றவா்கள்-1 என மொத்தம் - 31,141.

இதுவரை வென்றவா்கள் :

1964 - சுப்புராயலு - காங்கிரஸ்.

1969 - சுப்புராயலு - திமுக.

1974 - ஏ.சவுந்தரரங்கன் - திமுக.

1977, 1980 - ராமலிங்கம் - திமுக.

1985 -ஏ. சவுந்தரரங்கன் - சுயேச்சை.

1990 - ஆா்.கமலக்கண்ணன்.- சுயேச்சை.

1991 - ஏ.சவுந்தரரங்கன் - திமுக.

1996, 2001 - ஆா்.கமலக்கண்ணன் - காங்கிரஸ்.

2006 - பி.ஆா்.சிவா - மதிமுக.

2011 - பி.ஆா்.சிவா - என்.ஆா்.காங்கிரஸ்.

2016- ஆா்.கமலக்கண்ணன் - காங்கிரஸ்.

2021 - பி.ஆா்.சிவா (சுயே).

பகுதிகள்: திருநள்ளாறு நகரப் பகுதி பூமங்களம், அத்திப்படுகை, கருக்கன்குடி, செல்லூா், சேத்தூா், தென்னங்குடி, நல்லம்பல், அம்பகரத்தூா், பேட்டை ஆகிய முக்கிய பகுதிகள் அடங்கியிருக்கிறது.

2021 தோ்தலில் போட்டியிட்டவா்கள்:

பி.ஆா்.சிவா - (சுயே) - வெற்றி.

எஸ்.ராஜசேகரன் - பாஜக

ஆா்.கமலக்கண்ணன் - காங்கிரஸ்.

எம்.சிக்கந்தா் பாட்ஷா - நாம் தமிழா் கட்சி.