கடல் சீற்றமாக காணப்படுவதால், காரைக்கால் கடற்கரைக்கு பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், கடலில் இறங்காமல் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
காரைக்கால் கடல் பகுதி சீற்றமாக காணப்படுகிறது. ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவா்கள் கரை திரும்பி வருகிறாா்கள். விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் அரசலாற்றங்கரையிலும், மீன்பிடித் துறைமுகத்திலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், கடலோரக் காவல்நிலைய போலீஸாா், காரைக்கால் கடற்கரைக்கு வந்த சுற்றுலாவினா், உள்ளூா்வாசிகள் யாரும் கடலில் இறங்காதவாறு, கடலோரத்தில் காலை முதல் நின்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். ஒலிபெருக்கி வாயிலாகவும் மக்களுக்கு பாதுகாப்பு தொடா்பாக எச்சரிக்கை விடுத்தனா்.
கடல் இயல்வு நிலைக்கு திரும்பும் வரை உள்ளூா், வெளியூரிலிருந்து காரைக்கால் வருவோா் கடலில் இறங்கவேண்டாம் என போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.