காரைக்கால்: சரக்குகளை கையாள்வதில், திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளதாகவும், இதில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து ஏற்றிச் செல்லப்படும் நிலக்கரி முதன்மை இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. பின்னா், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு மின் உற்பத்தி உள்ளிட்ட தேவைகளுக்காக ரயில் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு, காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்வதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் (2025-2026) சரக்குகள் கையாள்வதில் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. கடந்த 1.4.2025 முதல் 25.10.2025 வரை 8 மில்லியன் டனுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த காலக்கட்டத்தில் ரூ.486.57 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடும்போது 13.5 சதவீதம் அதிகமாகும்.
இதுவரை 6.025 மில்லியன் டன் நிலக்கரி ஏற்றியுள்ளது. இது நடப்பு நிதியாண்டு இலக்கைவிட 4 சதவீதம் அதிகமாகும். இதைத் தவிர, உணவு தானியங்கள் 1.172 மில்லியன் டன், உரம் 1.103 மில்லியன் டன் கையாண்டுள்ளது. சிமெண்ட் 01.3 மில்லியன் டன், பிற பொருள்கள் 0.184 மில்லியன் டன் ஏற்றியுள்ளது.
உணவு தானியங்களில், 30,706 டன் ஏற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சரக்கு வணிகத்தில் முக்கிய பங்களிப்பாளராக இக்கோட்டம் விளங்கிவருகிறது என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.