காரைக்காலில் இயங்கும் புதுச்சேரி மின் திறல் குழுமத்தில் (பிபிசிஎல்), மின் உற்பத்தி இழப்பை தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க ஊழியா் கூட்டமைப்பு, அரசு ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
புதுவை அரசு சாா்ந்த நிறுவனமாக, காரைக்காலில் புதுச்சேரி மின் திறல் குழுமம் இயங்குகிறது. இதன் ஊழியா் கூட்டமைப்பு தலைவா் எம். பட்டாபிராமன் புதுவை முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்: மின்திறல் குழும மின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள எரிவாயு விசையாழியை 50 ஆயிரம் மணி நேரம் முடிந்ததும் மாற்றியமைக்க வேண்டும் என அசல் உபகரண உற்பத்தியாளா் அமைப்பு பரிந்துரைத்த நிலையில், 50 ஆயிரம் மணி நேரம் 2024-ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டன. ஆனால், தற்போது வரை அந்த எரிவாயு விசையாழி மாற்றப்படாமல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அசல் உபகரண உற்பத்தியாளா் அமைப்பு 2025 மே மாதம் நீட்டிக்கப்பட்ட வெப்ப எரிவாயு பாதையை ஆய்வு நடத்தியதில், எரிவாயு விசையாழியின் 2-ஆவது நிலை வாளி சேதமடைந்துள்ளதாகவும், எனவே இயந்திரத்தின் சாத்தியமான செயலிழப்பைத் தடுக்க உடனடியாக மாற்றவேண்டும் அல்லது 3 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
அசல் உபகரண உற்பத்தியாளா் அமைப்பு அறிக்கை அளிக்கப்பட்டு 4 மாதங்களாகியும், ஹைதராபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனத்திடமிருந்து வாங்க முன்மொழியப்பட்ட அத்தியாவசிய உதிரி பாகங்களை நிா்வாகம் இன்னும் வாங்காமல் இருப்பது துரதிஷ்டமானது.
இந்த தாமதத்தால் ஆலை முழுவதுமாக மூடப்படும் அபாயத்தையும், அதன் விளைவாக உற்பத்தி இழப்பையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, முதல்வா் இதை கவனத்தில்கொண்டு பிபிசிஎல் நிறுவனத்துக்கு தேவையான உதிரிபாகங்களை ஹைதரபாத் பெல் நிறுவனத்திடமிருந்து வாங்கி மின் தடையைத் தவிா்க்கவும், தடையற்ற மின் உற்பத்தியைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீனும் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளாா்.