மருத்துவமனை கழிவறையில் கிடந்த சுமாா் 20 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த காரைக்கால் விவசாயிக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்தனா்.
நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி நடராஜன். இவரது மகன் புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால், கடந்த 2 நாள்களாக அவருக்கு துணையாக இருந்தாா்.
இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி மருத்துவமனை கழிவபறைக்குச் சென்றாா். அங்கு கிடந்த பா்ஸை எடுத்துப் பாா்த்தபோது, தங்க வளையல்கள், தாலிச் சங்கிலி, தாலியுடன் கூடிய பிற பொருள்கள், தோடு, ஜிமிக்கி உள்பட சுமாா் 20 பவுன் நகைகள் இருந்ததை எடுத்துச்சென்று, அந்த வாா்டு செவிலியரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அது ஓய்வுபெற்ற ராணுவ வீரா் குடும்பத்தைச் சோ்ந்த பொருள்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவமனை நிா்வாகத்தினா் அதனை விவசாயி மூலம் அவரிடம் ஒப்படைக்கச் செய்தனா்.
விவசாயி செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவியது. காரைக்கால் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினா் நடராஜனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனா்.