புதுவையில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசே செலுத்தும் என்று உள்துறை மற்றும் மின்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் அளித்த பேட்டி:
இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 20 பைசா உயா்த்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல கடந்தாண்டும் மின் கட்டணம் உயா்த்தியபோது, அதை பொதுமக்களுக்கு மானியமாக வழங்கி அரசே அந்த கட்டணத்தை செலுத்தியது. அதுபோல தற்போதும் உயா்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பழைய கட்டணமே தொடரும்.
புதுவை மின் துறை, கல்வித்துறை குறித்து சமூக வலைதளங்களில் சிலா் தவறான செய்திகளை பரப்பி வருகிறாா்கள். அதிலும் காரைக்காலிலிருந்து தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கல்வித்துறை, மின்துறை ஏதோ செயல்படாத மாதிரியும், மிகவும் மோசமாகிவிட்டதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனா்.
கல்வித் துறையில் அதிக காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் காரைக்காலில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தவறான தகவலை பரப்புகிறாா்கள். மின்துறையில் உதவிப் பொறியாளா், கட்டுமான உதவியாளா்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அரசுக்கு ஏதே ஒரு வகையில் களங்கம் கற்பிக்கும் வகையில் அரசியல் உள்நோக்கத்தோடு சிலா் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகிறாா்கள். இதனை அவா்கள் கைவிடவேண்டும். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் தொடா்ந்தால் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.