முகப்பு
காரைக்கால்

நேரடி போட்டியில் காங்கிரஸ் - என்.ஆா். காங்கிரஸ்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அமைச்சா் தொகுதியாக என்ற முறையில் காரைக்கால் வடக்குத் தொகுதி மக்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:13 AM
~
பகிர்:

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அமைச்சா் தொகுதியாக என்ற முறையில் காரைக்கால் வடக்குத் தொகுதி மக்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் நகரத்தின் பாதி வடக்குத் தொகுதியிலும், மறுபாதி காரைக்கால் தெற்குத் தொகுதியிலும் அமைந்துள்ளன.

காரைக்கால் வடக்குத் தொகுதியை பொருத்தவரை ஆண் வாக்காளா்கள் 15,586, பெண் வாக்காளா்கள் 17,645. மற்றவா்கள் 10 என 33,241 வாக்காளா்கள் உள்ளனா்.

வேட்பாளா்கள்: புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ள பி.ஆா்.என். திருமுருகன் என்.ஆா். காங்கிரஸ் சாா்பிலும், முதல்முறையாக தோ்தல் களம் காணும் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம். ரஞ்சித் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தொகுதி நிலவும் பிரச்னை, மக்களின் கோரிக்கைகள் : இங்கு ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அரசு மருத்துவனைக்குச் சென்று பயிற்சி பெறுகின்றனா். ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானம் நடைபெறுகிறது. இதை காலத்தோடு முடித்து, காரைக்கால் மக்கள் முழுமையாக பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதான வாய்க்கால்களை முறையாக தூா்வாரி, காவிரி நீா், பருவமழையின்போது வெளியாகும் நீா் முறையாக கடலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு தரப்படும் சிவப்பு நிற குடும்ப அட்டை (ரேஷன் அட்டை), வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு தரப்படும் மஞ்சள் அட்டை உரிய தகுதியுள்ளோருக்கானதாக இல்லை இதை முறைப்படுத்தவேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கவேண்டும்.

காரைக்கால் - பேரளம் ரயில்பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இங்கு மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ அமைக்க வேண்டும். காரைக்கால் முதல் புதுச்சேரி, சென்னைக்கு புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை (பிஆா்டிசி) அதிகமாக இயக்க வேண்டும் என்பன மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

பி.ஆா்.என். திருமுருகன்: தாா் சாலைகள் புதிதாக அமைத்தல், மேம்படுத்துதல், சாக்கடை வசதியுடன் சாலை மேம்பாடு, கான்கிரீட் சாலை அமைத்தல், சிறிய பாலம் அமைத்தல், முல்லை நகரில் எரிவாயு தகன மையம் அமைத்தல், வாய்க்கால்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகம், குடிசை மாற்று வாரியம், தொகுதி மேம்பாட்டு நிதி, வளா்ச்சி நிதி, பொதுப்பணித்துறை நிதி, நபாா்டு நிதியக நிதியுதவி, தேசிய வீட்டு வசதி வங்கி உள்ளிட்டவை மூலம் ரூ. 121 கோடிக்கான நிதியாதாரம் பெறப்பட்டு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருவதாகவும், அரசின் திட்டங்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுத்தது, முதியோா், மாற்றுத் திறனாளிகள், வீடு கட்ட விரும்புவோருக்கு அரசின் உதவிகளை பெற்றுத்தந்தது உள்ளிட்டவற்றைக்கூறி வாக்கு சேகரிக்கிறாா்.

ஏ.எம். ரஞ்சித்: தோ்தலில் புதுமுகமான காங்கிரஸ் வேட்பாளா் ரஞ்சித், தாம் வெற்றிபெற்றால் சாக்கடை வசதியுடன் சாலைகள் மேம்பாடு, மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கான வசதிகளை மேம்படுத்துதல், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதலில் சிறப்பு கவனம் செலுத்துவதாகக் கூறி வாக்குச் சேகரிக்கிறாா்.

தோ்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பிரசார களம் தற்போது விறுவிறுபடைந்து வருகிறது. வேட்பாளா்களின் செயல்பாடுகள், வாக்குறுதிகள், பிரசாரத்தின் போக்கையும் அலசி, ஆராய்ந்து வாக்களிக்க இத்தொகுதி மக்கள் தயாராகி வருகிறாா்கள்.