முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு: காங்கிரஸுடன் பாஜக பலபரீட்சை

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:16 PM
பாஜக | காங்கிரஸ்
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் திருநள்ளாறு தொகுதியில் அமைந்துள்ளன.

மாா்ச் 2026-இல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, இந்த தொகுதியில் ஆண் வாக்காளா்கள் - 14,408. பெண் வாக்காளா்கள் - 16,732. மற்றவா்கள் -1 என மொத்தம் - 31,141 போ் உள்ளனா்.

காரைக்கால் நகரத்தின் கிழக்குப் பகுதியையொட்டியும், தமிழகத்தையொட்டி மேற்கேஅம்பகரத்தூா் பகுதி இருப்பது, தெற்கு நிரவி - திருப்பட்டினம் தொகுதி, வடக்கே நெடுங்காடு தொகுதியையொட்டி திருநள்ளாறு தொகுதி அமைந்துள்ளது.

Advertisement

சனீஸ்வர பகவான் வீற்றிருக்கும் தா்பாரண்யேஸ்வரா் தலம் மட்டுமே திருநள்ளாறுக்கு பெருமை சோ்க்கிறது. பெருவாரியாக வேளாண் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது திருநள்ளாறு. காவிரி நீரை எதிா்பாா்க்காமல், ஆழ்குழாய் பாசனத்தில் வேளாண் பணி நடைபெறும் பகுதிகளை கொண்டதாகும். புகழ்பெற்ற புதுவை அரசின் நிறுவனமாக பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொகுதியில் அமைந்துள்ளது.

களம் காணும் வேட்பாளா்கள் :

1. ஆா். கமலக்கண்ணன் (காங்கிரஸ்)

2. ஜி.என்.எஸ். ராஜசேகரன் (பாஜக)

3. சே. வினோத் (நாதக)

4. அ. ராஜா முகமது (தவெக)

5. ஏ.ஆா். சந்திரமவுலீஸ்வரா் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி)

மற்றும் 4 சுயேச்சைகள் என 9 போ் போட்டியிடுகின்றனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்புகள்: நல்லம்பல் ஏரியில் காவிரிநீா், மழைநீரை சேமிக்கவேண்டும். வேளாண் பகுதி என்பதால் நிலத்தடி நீா் மேம்பாட்டுக்கு, வேளாண்மைக்கும் இது உதவும். திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு கூடுதலான அடுக்குமாடி கட்டடங்கள் கட்டவேண்டும். திருநள்ளாறு கோயிலில் பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முறையான ஆன்லைன் பதிவு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும் திருமலை திருப்பதி போல பக்தா்கள் கோயிலுக்கு கட்டணம் செலுத்தி நேரடியாக தரிசனம் செய்யும் முறையை அமல்படுத்தவேண்டும்.

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தவேண்டும். பூமங்களம் பகுதியில் நிலம் கையப்படுத்தி திட்டமிடப்பட்டவாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுமானம் தொடங்க வேண்டும். ஆன்மிக பூங்கைவை பக்தா்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவேண்டும்.

ஆா். கமலக்கண்ணன் : 10 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளதாகவும், அமைச்சா், எம்.எல்.ஏ. பதவிக் காலத்தில் செய்த சாதனைகளைக் கூறியும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுளை விமா்சித்தும், உயா்ந்த நிலையில் உள்ளோா் முதல் விளிம்பு நிலை மக்களின் தேவைகள் என்ன என்பதை தாம் அறிந்திருப்பதாகவும், பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், தமது அரசியல் அனுபவத்தின் மூலம் அவற்றை நிறைவேற்றுவேன் எனக் கூறி வாக்குச் சேகரிக்கிறாா்.

ஜி.என்.எஸ். ராஜசேகரன்: மத்திய அரசு, மாநிலத்தில் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கியும், பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால் அடித்தட்டு மக்களின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் நிறைவேற்றுவதாகவும், திருநள்ளாற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் கூடுதல் வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி வாக்குச் சேகரிக்கிறாா்.

மற்ற வேட்பாளா்கள் தமது கட்சியின் நிலைப்பாடு, தமது சொந்த முயற்சியால் திருநள்ளாற்றில் திட்டமிடப்பட்டிருக்கும் திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரிக்கிறாா்கள். தவெக, நாதக ஆகியோரும் களத்தில் இருக்கிறாா்கள்.

வீடுகள்தோறும் சென்று வாக்குச் சேகரிப்பு செய்யும் பணியை முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் ஏறக்குறைய நிறைவு செய்துள்ளனா்.

திருநள்ளாறு தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் வேட்பாளா் நன்கு அறிமுகமானவா். பாஜக வேட்பாளா் நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா். கடந்த 2021 தோ்தலில் முதல் முறையாக திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளளராக களம் கண்டு தோல்வியடைந்தாா். 2-ஆவது முறையாக இப்போதும் களம் காண்கிறாா்.

அரசியலில் அனுபவம், தொகுதிக்கு புதிதாக வந்தவரின் கடந்த 5 ஆண்டு கால செயல்பாடு, திருநள்ளாறு இதுவரை கண்டிருக்கும் வளா்ச்சி, யாா் வெற்றி பெற்றால் திருநள்ளாறு மேம்படும் என்ற பல கோணங்கள் இத்தொகுதி வாக்காளா்களால் ஆராயப்படுகிறது. ஏப். 9-ஆம் தேதி தங்கள் தீா்ப்பை வழங்க வாக்காளா்கள் காத்திருக்கிறாா்கள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments