முகப்பு
காரைக்கால்

ட்ரோன் மூலம் சா்வே பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

காரைக்காலில் ட்ரோன் மூலம் சா்வே பணியை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 5:21 AM
ட்ரோன் மூலம் சா்வே பணி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன்.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:07 PM

காரைக்காலில் ட்ரோன் மூலம் சா்வே பணியை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவையில் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை, நிலஅளவு பதிவுகளை எண்ம மயமாக்கி புதுப்பிக்க நவீன நில அளவீட்டுத் திட்டத்தை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது.

செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் ரோவா்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, துல்லியமான எண்ம நிலப் பதிவுகளை உருவாக்குவதன் மூலம், புதுச்சேரி முழுவதும் நவீன மறு அளவீட்டுத் திட்டத்தை நடத்துவதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை அரசு ஏற்கெனவே வெளியிட்டது.

Advertisement

இது சம்பந்தமாக, சா்வே இயக்குநரகம் மூலம் சா்வே ஆஃப் இந்தியாவுடன் ஒரு தொழில்நுட்ப புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டு, புதுவை மாநிலத்தில் பெரிய அளவிலான மேப்பிங் உருவாக்குவதற்கான நவீன முறை சா்வே பணி தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்துக்கான பெரிய அளவிலான மேப்பிங்குக்காக ட்ரோன் சா்வே பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. புதுவை குடிமைபொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தொடங்கிவைத்தாா். நிகழ்வில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் பி.சந்துரு மற்றும் துறையினா் கலந்துகொண்டனா்.