108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதுவை மாநில 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு முதல்வா் அறிவித்த ஊதிய உயா்வை வழங்கவும், கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 5 சதவீத ஊதிய உயா்வை வழங்கவும், கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய போனஸ் தொகையை நிலுவையுடன் வழங்கவும், என்ஆா்எச்எம் திட்டத்தின்கீழ் 19 ஆண்டுகளாக பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை அவுட் சோா்சிங் என்று முத்திரை குத்தாமல் என்ஆா்எச்எம் திட்டத்தின் கீழ் தொடா்ந்து அனைத்து சலுகைகளையும் வழங்க வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் ஓட்டுநா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநா்களை காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், இணைப் பொதுச்செயலாளா் காளிதாஸ், செயலாளா் ஞானவேல் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தொடா்ந்து நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாரை சம்மேளன நிா்வாகிகள் சந்தித்து 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநா்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினா். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நலவழித்துறை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனா்.