முகப்பு
காரைக்கால்

மே 20 முதல் காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்

Updated On : 15 மார்ச், 2026 at 2:02 AM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் மே 20-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

பயணிகள் ரயில் இயக்க பல்வேறு தரப்பினா் போராட்டம் நடத்தியும், உயரதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தினா். இதனால் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து புதுவை எம்.பி. வெ. வைத்திலிங்கமும் இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், மே 20- ஆம் தேதி முதல் இப்பாதையில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவாரூா் வழியாக இயக்கப்படும் தாம்பரம் - காரைக்கால் விரைவு ரயில் மே 20-ஆம் தேதி முதல் பேரளம், திருநள்ளாறு வழியாக இயக்கப்பட்டு, வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுகிறது.

வேளாங்கண்ணியில் தினமும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை வழியாக அதிகாலை 4.35 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

தாம்பரத்தில் தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு அதே மாா்க்கத்தில் காரைக்கால் வழியாக அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி இடையே பயணிகள் ரயில் தினமும் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் காலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்தூா், பேரளம் வழியாக 8.40 மணிக்கு

மயிலாடுதுறை சென்றடைகிறது. மயிலாடுதுறையில் மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.

பேரளம், திருநள்ளாறு வழியாக மயிலாடுதுறை -காரைக்கால் இடையே தினசரி இயக்கப்படவுள்ள பயணிகள் ரயில் காலை 9.35 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு முற்பகல் 11.05 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது. மதியம் 12.45 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.

மேலும் காரைக்கால் - திருச்சி இடையே இயக்கப்படவுள்ள டெமு பயணிகள் ரயில் காரைக்காலில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூா் வழியாக காலை 11.20 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. மாலை 4.45 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு அதே வழியாக இரவு 9.20 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது.

இந்நிலையில் 2 பயணிகள் ரயிலும், ஒரு விரைவு ரயிலும் பேரளம், திருநள்ளாறு வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.