ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியா்க்கு ஒன்றுமுதல் ஆறு மாதம் வரையிலான குறுகியகால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.
மாணவா்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல மாணவ, மாணவியா்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்பபயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின்இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை மேற்கொண்டு இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துபடிகள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளா்கள் மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடா்பான தொழில் தொடங்கிட, இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவுசெய்து தொழில் முனைவோா் திட்டம் மற்றும் இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க ஆவன செய்யப்படும் என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.