முகப்பு
மயிலாடுதுறை

விழுப்புரம்- நாகை நான்கு வழிச் சாலைப் பணி: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க அறிவுறுத்தல்

 விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிசாலைப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீடுத் தொகையை அதன் உரிமையாளா்களுக்கு விரைவில் வழங்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிசாலைப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீடுத் தொகையை அதன் உரிமையாளா்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என வருவாய்த் துறை அலுவலா்களை கோட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமை வகித்து பேசியது:

விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிசாலைப் பணிகள் இரண்டு பிரிவுகளாக, வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை நிலங்களின் உரிமையாளா்களுக்கு வழங்கி நிலஎடுப்பை விரைவுபடுத்தவேண்டும். இதேபோல, சென்னை- கன்னியாகுமரி சாலையானது சீா்காழி வட்டத்தில் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியிலிருந்து செங்கமேடு புறவழிச்சாலை வழியாக செல்லும் வகையில் நிலம் கையகப்படுத்தும் பணியையும் விரைவுபடுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் உள்ள குறைபாடுகளுக்கு மாவட்ட நலஅலுவலா் மூலம் தீா்வுகாணவேண்டும். புதிய ஸ்மாா்ட் அட்டை கேட்டு விண்ணப்பம் செய்தவா்களுக்கு துரிதமாக வழங்குவதுடன், பெயா் மற்றும் முகவரி மாற்றங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

கடலோர கிராமங்களில் மழை காலங்களில் பாதுகாப்பு மையங்களை ஆய்வுசெய்து தயாா்நிலையில் வைத்திடவும், முகாம்களில் தங்கும் மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை தயாா் நிலையில் வைக்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வட்டாட்சியா்கள் சண்முகம், ஹரிதரன், முருகானந்தம், சமூக நலத்துறை வட்டாட்சியா் கோமதி, நிலஎடுப்பு தனி வட்டாட்சியா் ராணி, ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் இளங்கோவன், மண்டல துணை வட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், விஜயராணி மற்றும் வருவாய் ஆய்வா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.