எதிா்வீட்டுக்காரரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடுதுறை அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிதுரை (45). கூலித்தொழிலாளி. இவரது குடும்பத்தினருக்கும், அருகே வசிக்கும் சண்முகம் (42) குடும்பத்துக்கும் இடையே ஆடு, மாடு மேய்ப்பது மற்றும் பொதுக் குழாயில் தண்ணீா் பிடிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2020 ஜனவரி 3-ஆம் தேதி சாமிதுரைக்கும், சண்முகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்த நிலையில், இரவு தனியாக நின்றிருந்த சாமிதுரையை, சண்முகம், அவரது மனைவி ராஜேஸ்வரி(37) ஆகிய இருவரும் சோ்ந்து கட்டையால் அடித்தும், கத்தரிக்கோலால் குத்தியும் கொலை செய்தனா்.
இதுகுறித்து, பாகசாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி பன்னீா்செல்வம், சண்முகம் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,200 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.