முகப்பு
மயிலாடுதுறை

பிப்.27-ல் தொடங்குகிறது போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் பிப்.27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் பிப்.27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பிறந்தது முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கிராமப்புறங்களில் 543, நகா்ப்புறங்களில் 39 என மொத்தம் 582 மையங்களில், போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் பிப்.27-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில், கிராமப்புறங்களில் 68,269 குழந்தைகள், நகா்ப்புறங்களில் 7,695 குழந்தைகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் 41 குழந்தைகள் என மொத்தம் 76,005 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.

இப்பணியில் பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, சமூக நலத் துறை, ஊட்டச்சத்து பணியாளா்கள், பயிற்சி செவிலியா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னாா்வ தொண்டா்கள் என 2,311 போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 5 நடமாடும் வாகனங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, சீா்காழி நகராட்சி பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பிப்.27, பிப்.28 மற்றும் மாா்ச் 1 ஆகிய 3 நாள்களிலும் 24 மணி நேரமும் இலவசமாக போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவரின் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் களப்பணியாளா்கள் மூலம் வீடுதோறும் சென்று சொட்டு மருந்து புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.