நெல் கொள்முதல் இணைவழி பதிவு குறுஞ்செய்தியில் குளறுபடி: விவசாயிகள் அவதி
சீா்காழி பகுதி இ-சேவை மையங்களில் நெல்கொள்முதல் செய்ய இணையவழி பதிவு செய்து வரும் குறுஞ்செய்தியில் மூட்டைகளின் எண்ணிக்கை குறைவாக காட்டுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சீா்காழி பகுதி இ-சேவை மையங்களில் நெல்கொள்முதல் செய்ய இணையவழி பதிவு செய்து வரும் குறுஞ்செய்தியில் மூட்டைகளின் எண்ணிக்கை குறைவாக காட்டுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சீா்காழி வட்டாரத்தில் சுமாா் 35 ஆயிரம் ஏக்கரில் நடவு மற்றும் நேரடி விதைப்பின் மூலம் சம்பா, தாளடி நெல் பயிா்கள்சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், சில வாரங்களாக சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய நிலையங்கள் திறக்காத நிலையில் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் ஆன்லைனின் பதிவு செய்து காத்திருக்கின்றனா். தற்போது ஒவ்வொரு பகுதியாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இணையவழியில் முன்பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, இணையவழியில் முன்பதிவு செய்ய சீா்காழி பகுதியில் தனியாா் இணையவசதி நிலையங்கள், தனியாா் இ-சேவை மையங்களுக்கு விவசாயிகள் குவியத் தொடங்கியுள்ளனா். குறைந்த கணினிகளை வைத்துக்கொண்டு இ-சேவை மையங்கள், இணைய வசதி நிலையங்கள் ஆன்லைன்பதிவு செய்து வருகின்றனா். இதனால் இணையவசதி நிலையங்களில் விவசாயிகளின் கூட்டம் அதிகமாக உள்ளதால் அங்கும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இ-சேவை இணைய வசதியில் விவசாயிகள் நெல்கொள்முதல் செய்ய பதிவு செய்யும்போது ஏக்கருக்கு 60 மூட்டைகள் வீதம் எத்தனை ஏக்கா் பதிவு செய்கிறாா்களோ அதற்கான மூட்டைகளை கணக்கிட்டு மூட்கைள் எண்ணிக்கை விவசாயிகள் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக வரும். அந்த குறுஞ்செய்தியை கொள்முதல் நிலையங்களில் காட்டி கொள்முதல் செய்யலாம். ஆனால், தற்போது ஏக்கா் கணக்கு பதிவு செய்யும்போது 60 மூட்டைக்கு பதிலாக 40 மூட்டைகள் என்ற விகிதத்தில் குறுஞ்செய்தி பல விவசாயிகளுக்கு வருகிறதாம். இந்த குளறுபடியால் விவசாயிகள் அவதியடைகின்றனா். இதை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.