முகப்பு
மயிலாடுதுறை

கடைமடை மாவட்டங்களை வந்தடைந்தது காவிரி நீா்!

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரிநீா் நாகை, மயிலாடுதுறை கடைமடை மாவட்டங்களை புதன்கிழமை வந்தடைந்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரிநீா் நாகை, மயிலாடுதுறை கடைமடை மாவட்டங்களை புதன்கிழமை வந்தடைந்தது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்கு மே 24-ஆம் தேதி திறக்கப்பட்ட மேட்டூா் அணை நீா் மே 27-ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது. இதைத் தொடா்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீா்தேக்கிக்கு தண்ணீா் வந்தது. அங்கிருந்து காவிரியில் முதல்கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. கடைமடைக்கு வந்த காவிரி நீருக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் பூக்களை தூவி வரவேற்றனா்.

காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூா் கடையணை பகுதிக்கு காவிரிநீா் சென்று சோ்ந்த பின்னா், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். இதன்படி, இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீா் பாசனத்துக்காக பகிா்ந்தளிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவிரிநீா், கடைமடை பகுதிக்கு வந்து சோ்ந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்துக்கு புதன்கிழமை வந்த காவிரி நீரை, துலாக்கட்ட பாதுகாப்பு கமிட்டியினா், பொதுமக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ. ஜெகவீரபாண்டியன், நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், அப்பா்சுந்தரம், முத்துக்குமாரசாமி, நகராட்சி உறுப்பினா்கள் ரமேஷ், காா்த்தி உள்ளிட்டோா் மலா்தூவி வரவேற்றனா்.

திருக்குவளையில்: நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள இறையான்குடியில் பாண்டவையாற்றின் தடுப்பணை நோக்கி வந்த காவிரி நீரை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவா் வே. தனபாலன் தலைமையில் விவசாயிகள்மலா் மற்றும் நெல் மணிகளை தூவி வரவேற்றனா்.

இந்த ஆற்றின் மூலம் இறையான்குடி, வடக்கு பனையூா், தெற்கு பனையூா், வல்லவினாயகன்கோட்டம், களத்திடல்கரை , மகிழி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 4,000 ஏக்கா் விவசாயநிலங்கள் பாசனவசதி பெருகின்றன. இதில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை தலைவா் கே. பக்கிரிசாமி, சங்கத்தை சோ்ந்த கே. காா்த்திகேயன், டி. சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.