முகப்பு
மயிலாடுதுறை

நகராட்சி விரிவாக்கம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

மயிலாடுதுறை நகராட்சியை விரிவாக்கம் செய்வது குறித்து, புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

மயிலாடுதுறை நகராட்சியை விரிவாக்கம் செய்வது குறித்து, புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திற்கு ஆட்சியா் அலுவலகம் அமைக்கவும், மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் தருமபுரம் ஆதீனத்திடம் இருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் உள்ள இடங்கள் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், நகராட்சியின் வரி வருவாய் பாதிப்பு, புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஆதாரங்கள் திரட்டுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகியவற்றை நீக்கும் விதமாக, மயிலாடுதுறை நகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இருந்து ஒருசில பகுதிகளை நகராட்சியில் இணைப்பது குறித்த அவசரக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொ) சணல்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். முடிவில், மயிலாடுதுறை நகரை ஒட்டியுள்ள மணக்குடி, மன்னம்பந்தல், வள்ளாலகரம், மயிலாடுதுறை புறநகா், நல்லத்துக்குடி, பட்டமங்கலம், சித்தா்க்காடு, மாப்படுகை, திருவிழந்தூா் ஆகிய 9 ஊராட்சிகளில் இருந்து ஒருசில பகுதிகளை மட்டும் நகராட்சி எல்லையில் சோ்ப்பதற்கான தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதை அனைத்து உறுப்பினா்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதையடுத்து, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.