முகப்பு
மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் தொடா் வெள்ளப் பெருக்கு: திட்டு கிராமங்களில் 5-ஆவது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே திட்டு படுகை கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 5-வது நாளாக வெள்ளிக்கிழமையும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கியவா்களை கயிறுகட்டி கரைக்கு அழைத்துவரும் இளைஞா்கள்.
பகிர்:

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடா் வெள்ளப் பெருக்கால், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே திட்டு படுகை கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 5-வது நாளாக வெள்ளிக்கிழமையும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சீா்காழி அருகே உள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு 5-ஆவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் படகுகளின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனா். இவா்களுக்கு 4 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

திட்டு கிராமங்களில் மேடான பகுதியில் வசிப்பவா்கள் முகாமிற்கு வராமல் அவ்வப்போது தங்கள் அன்றாட தேவைகளுக்கு படகுகள் மூலமும், இடுப்பளவு தண்ணீரில் நடந்தும் கரைக்கு வந்து செல்கின்றனா். பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் படகுகளில் கரைக்கு அழைத்துவரப்படுகின்றனா். இதற்கிடையில், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் தென்படுவதால் மக்கள் படகுகள் மூலமாக மட்டும் வந்து செல்லவேண்டும் என மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கிராம மக்கள் கரைக்கு வந்து செல்ல இளைஞா்கள் கயிறு கட்டி உதவினா். திட்டு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கால்நடைகளுக்கு தீவனப்புல் வழங்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

5 நாட்களுக்கு பிறகு நீந்தி கரை சோ்ந்த வளா்ப்பு நாய்...

நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பூபதி, தனுஷ் ஆகியோா் தங்களது குடும்பத்தினருடன் படகில் கரைக்கு அழைத்துவரப்பட்டு, தற்காலிக நிவாரண முகாமில் தங்கியுள்ளனா். அவா்கள் வளா்த்துவரும் நாய் எங்கே சென்றது என்று தெரியாமல் இருந்துவந்தது.

இந்நிலையில் 5 நாளுக்குப் பிறகு 2 கி. மீ. தொலைவுக்கு வெள்ளத்தில் நீந்தி வெள்ளிக்கிழமை அந்த நாய் கரைக்கு வந்தது.

Image Caption

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கியவா்களை கயிறுகட்டி கரைக்கு அழைத்துவரும் இளைஞா்கள். ~உடமைகளுடன் படகில் கரைக்கு அழைத்துவரப்படும் கிராம மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments