மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது, திட்டமிட்டபடி அக்டோபா் மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வே. அமுதவல்லி தெரிவித்தாா்.
மயிலாடுதுறை ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநருமான வே. அமுதவல்லி, புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட காவிரி படித்துறை துலாக்கட்டம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணியையும் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா், பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டணக் கழிப்பறை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கட்டண விலைப்பட்டியல் இல்லாததை அறிந்து, உடனடியாக கட்டண விலைப்பட்டியலை வைக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, வள்ளாலகரம் ஊராட்சி சின்னநாகங்குடி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதையும், வள்ளாலகரம் ஊராட்சி தென்பாதி தெருவில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 16.43 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணியையும், ஆனந்ததாண்டவபுரத்தில் இயந்திரங்களைக் கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, மன்னம்பந்தல் பால் பண்ணை அருகே நடைபெறும் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா், பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் அக்டோபா் மாதத்துக்குள் முடிவடைய உள்ள நிலையில், தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா் வ.யுரேகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பால ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.