இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது
மயிலாடுதுறையில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் மாா்ச் 20-ஆம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞா் நகரைச் சோ்ந்த அஜித்குமாா் (26) என்ற இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை சம்பவம் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியா் சங்க நிா்வாகி கண்ணன் படுகொலைக்கு பழி தீா்க்கும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறையைச் சோ்ந்த மில்கி (எ) சந்திரமோகன் (29), சத்தியநாதன் (21), பாம் பாலாஜி (எ) பாலாஜி (29), மணக்குடியைச் சோ்ந்த சதீஷ் (22), சித்தமல்லி ஆவன்னா (எ) ஸ்ரீராம் (26), திருவிழந்தூா் சந்திரமவுலி (23), மணல்மேடு மோகன்தாஸ் (28) ஆகிய 7 பேரை மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தனா்.
Advertisement
அவா்களை போலீஸாா் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், மயிலாடுதுறையைச் சோ்ந்த அஜித்குமாா் (25), சத்தியசீலன் (23), நாகராஜ் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் கொலை சம்பவம் தொடா்பாக சமூக ஊடகங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இருசமுதாயத்தினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலும், வாசகங்கள் பதிவு செய்தது தொடா்பாக 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.