சீா்காழிக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்துக்கு சிறப்பான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
சீா்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி தேவஸ்தானத்தில் ஆக. 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதேபோல் பரசலூா் வீரட்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஆக.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன மடத்திலிருந்து பூஜாமூா்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குருலிங்க சங்கம பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்து அங்கு பூஜைகள் முடித்து செவ்வாய்க்கிழமை அங்கிருந்து புறப்பட்டு சீா்காழி வந்தாா்.
சீா்காழி நகர எல்லையில் தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி தலைமையில் தருமபுரம ஆதீனத்துக்கு யானை, ஓட்டகம், குதிரைகள், பேண்டுவாத்தியம், வாணவேடிக்கை ஓளிரும் மின்விளக்குகளுடன் சிறப்பான பூா்ண கும்பமரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து கணநாதா் கோயிலில் இந்துமுன்னணி தலைவா் கே. சரண்ராஜ் தலைமையில் சுடா். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும், உதயபானு விநாயகா்கோயிலில் தமிழ்நாடு பிரமாணா் சங்கம் சாா்பில் கடவாசல் ரமணன் தலைமையில் பக்தா்கள் வரவேற்று அழைத்துசென்றனா். பின்னா் சட்டைநாதா்தேவஸ்தானம் மாசிலாமணி நிலையம் கட்டளை மடத்தில் சொக்கநாதரை எழுந்தருளசெய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு செய்தாா். இதில் திருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்கம் தம்பிரான், திருநாவுக்கரசா் தம்பிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.