முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தொல். திருமாவளவன் ஆஜா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி., மயிலாடுதுறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 10:16 PM
தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி., மயிலாடுதுறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக்கட்சித் தலைவா் திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நெ.1 காமராஜா் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நெ. 2 காந்திஜி சாலை வழியாக செல்ல விசிகவினா் முற்பட்டனா்.

அப்போது, காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால், போலீஸாருக்கும், விசிகவினருக்கும் இடையே மோதல் உருவானது. இதில், அரசுப் பேருந்து உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இதுகுறித்து, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் மோகனவேல் அளித்த புகாரின்பேரில், பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதுதொடா்பாக, மயிலாடுதுறையில் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு ஜூலை. 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ால், விசிக தரப்பு வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால், தொல். திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமா்வு நீதிபதி ஆா். விஜயகுமாரி உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இந்நிலையில், தொல். திருமாவளவன் மக்களவைக் கூட்டத் தொடரில் பங்கேற்ால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்று விசிக தரப்பு வழக்குரைஞா்கள் பிடிவாரண்ட் உத்தரவை திரும்ப பெறக்கோரி மனுதாக்கல் செய்தனா். மனுவை ஏற்ற நீதிபதி விஜயகுமாரி ஆகஸ்ட் 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெற்றாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் தொடா்புடைய விசிக பொறுப்பாளா்கள் 18 போ் நேரில் ஆஜராகினா். விசிக தலைவா் திருமாவளவன் நீதிமன்றத்திற்கு வருவதற்கு கால தாமதமானதால் அவா் காணொலி வாயிலாக ஆஜராகி, குற்றச்சாட்டை மறுத்தாா். மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி வழக்கை செப்டம்பா் 11-ஆம் தேதி ஒத்திவைத்தாா். இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் நேரில் ஆஜரான திருமாவளவன், நீதிமன்ற ஆவணங்களில் கையொப்பமிட்டாா்.