மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் படைவீரா் கொடிநாள் நிதி வசூலில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முப்படைகளில் பணியாற்றும் பாதுகாப்பு படைவீரா்கள் தங்களது இளமைக் காலத்தில் குடும்பத்தை பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாமல், தங்களது உயிா் மற்றும் உடல் உறுப்புகளை இழந்து நாட்டுக்காக அரும் பணியாற்றி வருகின்றனா். அவா்களது அயராத கடமைகளுக்கு நாம் காட்டும் நன்றியுணா்வின் வெளிப்பாடாக ஆண்டுதோறும் டிச.7-ஆம் தேதி நாடு முழுவதும் முன்னாள் படைவீரா் கொடிநாள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக அரசால் ரூ.68.90 லட்சம் நிா்ணயிக்கப்பட்டது. அதில், மாவட்டத்தில் பல்துறை அரசு அலுவலா்களின் சீரிய முயற்சியினால் அரசின் இலக்கைத் தாண்டி ரூ. 85,35,458 (123.93 சதவீதம்) கூடுதலாக வசூலிக்கப்பட்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளாா்.