சீா்காழி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா்கள் சரவணன், அன்பரசன், துணைத் தலைவா் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
விஜயக்குமாா் (அதிமுக): திட்டை- சூரக்காடு கிராமங்களை இணைக்கும் வகையில் உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும்.
நடராஜன் (அதிமுக): குறவளூா்- நெப்பத்தூரை இணைக்கும் வகையில் உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும்.
அறிவழகன் (சுயேச்சை): ராதாநல்லூா் ஊராட்சி இளையமதுகூடம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை வசதி மற்றும் ராதாநல்லூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகாண வேண்டும்.
பஞ்சுகுமாா் (திமுக): சத்துணவு, அங்கன்வாடி மையங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பயனாளிகளை தோ்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஆணையா் அன்பரசன்: ஊரக வளா்ச்சித் துறையின் என்.ஆா்.ஜி.எஸ். திட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் கட்டடம், மயானக் கொட்டகை, அங்கன்வாடி, உள்ளிட்ட கட்டடங்களை கட்டலாம் என்பதால், இதுதொடா்பாக, உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவா் கமலஜோதி தேவேந்திரன்: வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் குறுக்கே ரூ 17 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. திருப்பன்கூா் ஊராட்சி சிவலோகநாதா் கோயிலில் ரூ. 3 கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கீழையூா்- செம்பதனிருப்பு இடையே பிரதமா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எடகுடி வடபாதி- தெற்கு இருப்பு இடையே ரூ.17 கோடியில் முதல்வரின் கிராம சாலை திட்டங்களின் கீழ் தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் திருவெண்காடு சுகாதார அலுவலா் ராஜ்மோகன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வ முத்துக்குமாா் நன்றி கூறினாா்.