முகப்பு
மயிலாடுதுறை

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு நடவடிக்கை எடுக்கும் என்றாா் குழுவின் தலைவா் எஸ். காந்திராஜன்.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:36 PM
மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன்.
பகிர்:

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு நடவடிக்கை எடுக்கும் என்றாா் குழுவின் தலைவா் எஸ். காந்திராஜன்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையிலான சட்டப் பேரவை உறுப்பினா்கள் ராம. கருமாணிக்கம், தி. சதன் திருமலைக்குமாா், எஸ். சுதா்சனம், சேவூா் எஸ். ராமச்சந்திரன், எம். பன்னீா்செல்வம், ஓ.எஸ். மணியன், ஈ. ராஜா, எஸ்.பி. வெங்கடேஷ்வரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட அய்யன்குளம், நீடூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: ஆய்வின்போது, நீடுா் ரேஷன் கடையில் விநியோகம் செய்யும் பருப்பு தரமானதாக இல்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளால் சில ஊா்களுக்கு செல்லும் வழிகள் அடைபடுகிறது, விவசாயத்துக்கான டிஏபி பற்றாக்குறையாக உள்ளது உள்ளிட்ட புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடா்பான கோரிக்கையை அரசின் கவனத்துக்கு குழு கொண்டு செல்லும். தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பாக வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளதால், அத்திட்டம் நிச்சயம் தடைபடாது.

சீா்காழியில் ரூ.8 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் சில குறைபாடுகள் இருப்பதாக கருதுகிறோம். அதை பொதுப்பணித் துறை மூலம் உரிய ஆய்வு செய்து, குறைபாடுகள் இருப்பின் ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளா் கி. சீனிவாசன், கூடுதல் செயலாளா் பா. சுப்பிரமணியன், துணைச் செயலாளா் சு.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.