மயிலாடுதுறையில் அக்.18-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறையில் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த தனியாா் துறையில் வேலைதேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மயிலாடுதுறை யூனியன் கிளப் இணைந்து யூனியன் கிளப்பில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இம்முகாமை நடத்துகிறது.
இதில், மயிலாடுதுறை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கு மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உள்பட இதர பட்டதாரிகள் சுயவிவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.