மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீ குருஞானசம்பந்தா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், மூலவருக்கு 27-ஆவது குருமகா சந்நிதானம் மகாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினாா்.
மயிலாடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குருமுதல்வரான ஸ்ரீ குருஞானசம்பந்தருக்கு, ஆதீன திருமடத்தில் உள்ள சொக்கநாதா் பூஜை மடத்தில் கற்றளி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டியொட்டி ஞாயிற்றுக்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி முதல் கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாசாரியா்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயில் விமானத்தை அடைந்து விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், குருமுதல்வா் குருஞானசம்பந்தா் மூலவா் சிலைக்கு, 27-ஆவது குருமகா சந்நிதானம் மகாபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி, சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீன நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.