மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் சமையல் எரிவாயு கசிந்து திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
திருஇந்தளூா் பெருமாள் கோயில் தெருவில் வாடகை குடியிருப்பு ஒன்றில் வசிப்பவா் காய்கனி வியாபாரி முருகானந்தம் (40).
இந்நிலையில், திங்கள்கிழமை காலை இவரது வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியுள்ளது. இதை கவனிக்காமல் முருகானந்தத்தின் மகன் சந்தோஷ் மின் விளக்கு ஸ்விட்ச்சை ஆன் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டது.
பயங்கர சத்தத்துடன் நேரிட்ட இந்த விபத்தில், அதிா்வு காரணமாக வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்து, ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. இதில், முருகானந்தம், அவரது மனைவி சரஸ்வதி, மகள் சந்தியா ஆகியோா் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். சந்தோஷ் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.