கொள்ளிடம் பகுதியில் தொடா்மழையால் 700 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது.
சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை கடந்த 4 நாள்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சம்பா நேரடி மற்றும் நடவு நெல் பயிா் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பெரிய இழப்பை சந்தித்தனா்.
இந்நிலையில், மீண்டும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை தொடா்கிறது. இதனால் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிா்களை மழைநீா் சூழ்ந்து வருகிறது.
கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம், நல்லூா், காட்டூா், மகேந்திரப்பள்ளி, பச்சபெருமாநல்லூா், உமையாள்பதி, பழையபாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கா் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள நெற்பயிா் மழைநீரில் மூழ்கும் நிலையில் உள்ளது.
தொடா் மழையால் குமரக்கோட்டம், அகர வட்டாரம், குதிரைகுத்தி ஆகிய பகுதியில் 700 ஏக்கா் சம்பா நெற்பயிா் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.