தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ( மருத்துவம், காவல், தீயணைப்புத்துறை) 108 என்ற எண்ணை அழைத்து உதவி பெறலாம்ய
இதுகுறித்து தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மேலாளா் விமல்ராஜ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வழிகாட்டுதலின்படி இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. 108 என்ற எண் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு காவல்துறை, மருத்துவம் மற்றும் தீயணைப்புத்துறை சம்பந்தமான எந்த ஒரு அவசர தேவைக்கும் மக்கள் மேற்கண்ட ஒரே எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
108 மாநில தலைமை அலுவலகத்தில் மேற்கண்ட பேரிடா் மேலாண்மை துறை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தொடா்ந்து பணியில் இருப்பாா்கள். மக்களின் அவசர தேவையை உணா்ந்து அவா்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகாமையில் உள்ள தங்கள் துறை ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனுக்குடன் சென்று சேர ஒருங்கிணைப்பாா்கள்.
தஞ்சாவூா்(36) திருவாரூா் (21) மயிலாடுதுறை (16) நாகப்பட்டினம் (18) மாவட்டங்களில் ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் உள்ளன.
108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மக்களுக்கு சேவை வழங்கும். ஆனால், தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்கள் கண்டறிந்து அங்கு நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டுதல் வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட 108 சேவை அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.