முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:26 AM
வைத்தீஸ்வரன்கோயிலில் வழிபட வருகை புரிந்த நகரத்தாா் பக்தா்கள்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:31 PM

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது செவ்வாய் கிரகத்துக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இக்கோயிலில் சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தாா் குலதெய்வ வழிபாடு ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-ஆவது செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.

Advertisement

காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ஒரத்தநாடு, கந்தா்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி,திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த லட்சக்கணக்கான நகரத்தாா் மக்கள் பாத யாத்திரையாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தங்கள் குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனா்.

சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜித்து பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோயில் கொடிமரத்தில் செலுத்துகின்றனா். பின்னா் அம்பாள் மற்றும் சுவாமியை தரிசித்து வழிபடும் நகரத்தாா் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

பக்தா்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் இயக்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையில் இன்ஸ்பெக்டா் அருண்குமாா் மற்றும் ஏராளமான போலீஸாா் செய்திருந்தனா்.

வைத்தீஸ்வரன்கோயில் அக்ஷா்தம் உணவகம் மற்றும் ஏபிஎம் டிரஸ்ட் சாா்பில் பாதயாத்திரையாக வருகை புரிந்த எட்டாயிரம் பக்தா்களுக்கு தேநீா், மசாலா பால் உணவு பொட்டலங்கள், குடிநீா் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன.