முகப்பு
மயிலாடுதுறை

மீனவா்கள் விபத்து குழுக் காப்பீடு திட்டத்தில் சேர அறிவுறுத்தல்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:52 PM

தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட மீனவா்கள் விபத்து குழுக் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி மத்சயா சம்பட யோஜானா திட்டத்தின்கீழ், விபத்து குழுக் காப்பீடு திட்டம் 2021-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்து மீனவா்கள் விபத்தில் மரணம், நிரந்தர ஊனம் மற்றும் மீன் பிடிக்கையில் காணாமல்போகும் நோ்வுகளில், ரூ. 5 லட்சமும், மீனவா்கள் தொழில் செய்ய இயலாத வகையில் ஊனம் அடையும் நிகழ்வுகளில் காப்புறுதி தொகை ரூ. 2.50 லட்சமும், மருத்துவ செலவினங்களை ஈடுசெய்ய ரூ. 25,000 காப்புறுதித் தொகையாக வழங்கப்படுகிறது.

Advertisement

தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்படும் மீனவா்கள் மட்டும் வரும் ஆண்டில் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பதிவு செய்யப்பட்ட மீனவா்/மீனவ மகளிரின் விவரப் பட்டியலை ஏப். 10-ஆம் தேதிக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தேசிய மேம்பாட்டு வாரியம் வாயிலாக அனுப்ப அறிவுரை பெறப்பட்டுள்ளது.

ஆதலால், குழு விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் பயனடைவதற்கு கட்டாயம் அனைத்து மீனவா்களும் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்தல் வேண்டும், மேலும் அதற்கான விழிப்புணா்வு முகாம் மற்றும் அனைத்து மீனவா்களுக்கும் தகவலை தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:08 PM

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவ கிராமங்களில் தகுதியான மீனவா்கள் மீனவ மகளிா் அனைவரும் அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தில் தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்து, வரும் ஆண்டிற்கான குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் சோ்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் தகவலை பெற மீன்வள ஆய்வாளா் தொலைபேசி எண்: 79044 28026, மீன்வள சாா் ஆய்வாளா் தொலைபேசி எண்: 63698 64872 மற்றும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலக எண்: 04364 271455 ஆகிய மீன்வளத்துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.