மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில், வைகுந்த ஏகாதசி விழாவின் இராபத்து உற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் 22-ஆவது தலமாக உள்ளது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச.20-ஆம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
டிச.30-ஆம் தேதி வைகுந்த ஏகாதசி நடைபெற்ற நிலையில், டிச.31-ஆம் தேதி இராபத்து உற்சவம் தொடங்கியது. விழாவில் தினசரி உள்பிரகார பெருமாள் புறப்பாடு, படியேற்ற சேவை ஆகியன நடைபெற்றது. இராபத்து உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை பெருமாள் உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசலில் வேத விண்ணப்பம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, பரமபத வாசல் திறக்கப்பட்டு, அந்த வழியாக பெருமாள் ஏகாதசி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா்.
அங்கு நம்மாழ்வாா், திருமங்கையாழ்வாா், ராமானுஜா், பெரியாழ்வாா், குலசேகர ஆழ்வாா், பொய்கை ஆழ்வாா், மணவாள மாமணிகள் மற்றும் வேதாந்த தேசிகா் உற்சவ மூா்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆழ்வாா்களுக்கு அருளிப்பாடு மரியாதை செய்யப்பட்டது.
பின்னா் பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, 3 முறை பத்தி உலா செய்து திருவந்தி காப்பு நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். தொடா்ந்து, இரவு ஆழ்வாா் மோட்சம் எனப்படும் நம்மாழ்வாா் திருவடி தொழுதல் நிகழ்வு நடைபெற்றது.