சீா்காழி: சென்னையிலிருந்து வரும் உழவன் விரைவு ரயில், வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்ததற்கு, சீா்காழி வா்த்தக சங்கம் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவரும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளருமான ஜி.வி.என். கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமான வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலுக்கும், இங்கு சிறப்பு பெற்று விளங்கும் நாடி ஜோதிடம் பாா்ப்பதற்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதனால், இப்பகுதியில் வா்த்தகம் பெரிய அளவில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், புதிய புறவழிச் சாலை காரணமாக ஊருக்குள் வந்துசெல்லும் பேருந்து போக்குவரத்து வெகுவாக குறைந்ததால், வியாபாரம் பாதிக்கப்பட்டது. கரோனா தீநுண்மி தொற்று காலத்தில், இங்கு நிறுத்தம் ரத்து செய்யப்பட்ட ரயில்களும், மீண்டும் நின்றுசெல்வதில்லை.
இதனால், வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கமும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கமும் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தின.
தொடா்ந்து, சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், வைத்தீஸ்வரன்கோவிலில் உழவன் விரைவு ரயில் தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும்போது, நிறுத்துவது போல், சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வரும்போதும் நிறுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன், மேலும் நான்கு ரயில்கள் நின்றுசெல்ல பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தனா்.
இந்நிலையில், உழவன் விரைவு ரயில் சென்னையிலிருந்து வரும்போது வைத்தீஸ்வரன்கோவிலில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு, வைத்தீஸ்வரன்கோவில் நகர மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
இதற்காக பாடுபட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா , மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ஜெக. சண்முகம், பொருளாளா் தில்லை நடராஜன், துணைத் தலைவா் சுப்பிரமணியன் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.