கள்ளச் சாராயம் குடித்து இளைஞர் சாவு? கிராம மக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே கள்ளச்சாராயம் குடித்து இளைஞர் இறந்ததாகக் கூறி வியாழக்கிழமை இரவு கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகே கள்ளச்சாராயம் குடித்து இளைஞர் இறந்ததாகக் கூறி வியாழக்கிழமை இரவு கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகே கோவில்பத்து கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(27). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இவர் கள்ளச் சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாம். உடனே முத்துக்குமாரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் முத்துக்குமாரின் உடலை கிராமத்திற்கு கொண்டு சென்ற அப்பகுதி மக்கள் சீர்காழி கோவில்பத்து சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன், டி.எஸ்.பி சேகர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
கள்ளச்சாராயத்தால் இறந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வட்டாட்சியர் பாலமுருகன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இறந்தவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே மறியலில் ஈடுபட்ட சிலர் அருகில் சாராயம் விற்று வந்ததாகக் கூறப்படும் ஒருவரது வீட்டை அடித்து
நொறுக்கினர்.