நாகப்பட்டினம்

புதிய பயிர்க் காப்பீடு திட்டத்தில் பாரபட்சம்: விவசாயிகள் புகார்

DIN

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறையால் கடந்த ஆண்டுக்கான (2016- 17)மகசூல் இழப்பு சதவீதப் பட்டியலில் பாரபட்சம் உள்ளதாகவும், பல்வேறு குளறுபடியால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
காவிரி பாசனப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு என இயற்கை இடர்பாடுகளால் நெல் சாகுபடி பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.
சிறு, குறு விவசாயிகளும் பயன்பெறும் நோக்கத்தோடு, காப்பீட்டுக்காக விவசாயிகள் செலுத்தும் பிரிமியத் தொகையில் 50 சதவீதத்தை தமிழக அரசே செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முன்பு வருவாய் குறுவட்ட (பிர்க்கா) நிலையில் பயிர் மகசூல் இழப்பு மதிப்பீடு செய்யப்பட்டு வந்தது. இது விவசாயிகளுக்கு போதிய அளவில் பயனளிக்கவில்லை எனக் கருதி, திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தேசிய வேளாண் காப்பீடு திட்டமானது, பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டது. இதன்மூலம் விதைப்பு, இயற்கை இடர்பாடு, பூச்சி, நோய் தாக்குதல் போன்ற எந்த நிலையிலும் பயிர் பாதிப்பை கணக்கிடவும், வருவாய்க் கிராம வாரியாக மகசூல் இழப்பை மதிப்பிடவும் வகை செய்யப்பட்டது.
வரலாறு காணாத வறட்சி...
இந்த நிலையில், கடந்த ஆண்டில் (2016- 17) நிலவிய வரலாறு காணாத வறட்சியால் முற்றிலும் பயிர் பாதிக்கப்பட்டு, தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
பல இடங்களில் அறுவடைக்கே வழியில்லாம் பாதிப்புக்குள்ளான நிலையில், பயிர்க் காப்பீட்டுத் தொகையாவது முழுமையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே இருந்து வந்தது.
இந்தநிலையில், 2015-16 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு விவசாயிகளுக்கு போதிய அளவில் பயனளிக்காத நிலையில், 2016- 17 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு திட்ட இழப்பீடு கிடைப்பது பல இடங்களில் தாமதமாகி வருகிறது.
பட்டியலில் குளறுபடி...
குறிப்பாக நாகை மாவட்டத்தில் இழப்பீடு அளிக்கும் பணி சுணக்கமடைந்துள்ளது. இம்மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கான ஒப்பந்தம் தி நியூ இண்டியா அசூரன்ஸ் கம்பெனியுடன் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் வருவாய்க் கிராமங்கள் வாரியாக வெளியிட்டுள்ள இழப்பீட்டுக்கான பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீத விவரங்கள் முரண்பாடாகவும், குளறுபடியாகவும் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதாரணமாக பன்னைத்தெரு, கூட்டங்குடி கிராமங்களில் பயிர் பாதுகாப்பு குறைவான சதவீதம் அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சம்பந்தம் கூறியது:
வறட்சி பாதித்த பகுதியாக அரசு அறிவித்துவிட்ட நிலையில், இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் அளிக்கப்படும் பட்டியல் குளறுபடியாக உள்ளது. எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நூறு சதவீத பாதிப்பாக கருதி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தாமதமானால் போராட்டம் நடத்துவோம் என்றார்.
முன்னோடி விவசாயி த. குழந்தைவேலு கூறியது: தென்னடார் கிராமத்தில் உள்ள அரசின் மின் இறவை பாசனத் திட்டம் தண்ணீர் இல்லாததால் கடந்த ஆண்டில் ஒருநாள் கூட இயங்கவில்லை. நெல் விளையாததால் இந்த ஊரில் செயல்படும் அரசின் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவே இல்லை. இந்த கிராமத்தில் காப்பீடு நிறுவனம் மகசூல் இழப்பு குறித்து ஆய்வு செய்ததாகவே தெரியவில்லை. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்த முதல் பட்டியலில் தென்னடாரில் குறைவான சதவீதத்தை குறிப்பிட்டுள்ளது.
இதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், முழு பாதிப்பை ஒப்புக்கொண்டு, இரண்டாவது பட்டியல் வெளியிட்டுள்ளதாக கூட்டுறவு வங்கி மூலமாக தெரிந்துகொண்டுள்ளோம். ஆற்றுப் பாசனமே இல்லாத பஞ்சநதிக்குளம் நடுசேத்தி கிராமத்துக்கு இழப்பீட்டு விவரமே அறிவிக்கப்படவில்லை. இதுபோன்ற முரண்பாடுகள் களையப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் நூறு சதவீத இழப்பீடு அளிக்கவேண்டும். இந்த ஆண்டுக்கான சாகுபடியை தொடங்க உதவியாக பிடித்தங்கள் இல்லாமல் உடனே இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்றார். இப்பிரச்னை தொடர்பாக பல்வேறு கிராமங்களில் விவசாயிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்கள் அறிவித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், தொகையை உடனே வழங்கவும் உதவ வேண்டும் என்பதே நாகை மாவட்ட விவசாயிகளில் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT