நாகப்பட்டினம்

நெல்லுக்கான பணம் வழங்குவதில் தாமதம்: விவசாயிகள் சாலை மறியல்

DIN

வேதாரண்யம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல்லுக்குரிய பணத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்தும், நேரடியாகப் பணம் வழங்கக் கோரியும் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
தாணிக்கோட்டகம் கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை வகித்தார். ஜி.கே. நாகராஜன், முருகானந்தம்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் பங்கேற்றனர்.
நிகழ்விடத்துக்கு வந்த வேதாரண்யம் வட்டாட்சியர் ஆர். சங்கர், காவல் ஆய்வாளர் கண்ணையன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் அலுவலர் அன்பரசன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊரக வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகளுக்கானப் பணம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படுவதால், சில நடைமுறை சிக்கலால் நெல்லுக்கான பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இனி இதுபோன்ற தாமதம் ஏற்படாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். மேலும், மத்திய அரசின் விதிமுறைப்படி பணத்தை நேரில் வழங்க இயலாது எனவும் தெரிவித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், அதிகாரிகளின்  உறுதியளிப்பை எழுத்துப் பூர்வமாக தரும்படி வலியுறுத்தினர். இதற்கு அதிகாரிகள் மறுத்ததால், அவர்களை சிறிது நேரம்  முற்றுகையிட்டனர்.
பின்னர், வெள்ளிக்கிழமைக்குள் பணம் கணக்கில் வரவு வைக்கப்படாவிட்டால், திங்கள்கிழமை விற்ற நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் வழங்கிய ரசீது அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து, கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT