முகப்பு
நாகப்பட்டினம்

தேநீர் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

நாகையை அடுத்த புத்தூரில் உள்ள தேநீர் கடையில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 22 மே, 2018 at 1:20 AM
பகிர்:

நாகையை அடுத்த புத்தூரில் உள்ள தேநீர் கடையில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
புத்தூர் பிரதான சாலையில் உள்ள ஒரு சிற்றுண்டியகத்துடன் இணைந்த தேநீரகத்தில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதாக மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குப் புகார் கிடைத்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்தலின்பேரில், தொடர்புடைய கடையில் ஆய்வு மேற்கொள்ள நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜி. செல்வராஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, நாகை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன், நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, அக்கடையில் கலப்பட டீத்தூள் ஏதும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தை ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும் வகையில் காலியான ஒரு டீத்தூள் பாக்கெட் கிடந்தது தெரியவந்தது.
மேலும், அக்கடையில் போதுமான அளவில் சுகாதாரம் பராமரிக்கப்படாததும் ஆய்வின்போது கண்டறியப்பட்டு, கடையை தூய்மையாகப் பராமரிக்கவும், உணவுப் பண்டங்களை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மேலும் 5 தேநீர் கடைகளிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.