வெளிமாநில மது கடத்திய 35 பேர் கைது
நாகை மாவட்டத்தில் மது கடத்தியதாக, 35 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் மது கடத்தியதாக, 35 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு நாகை மாவட்டம் வழியாக மது கடத்துவது அதிகரித்து வருவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் கவனத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் அந்தந்தப் பகுதி போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் பதிலளித்தவர்களை சோதனை செய்ததில், அவர்கள் காரைக்கால் பகுதியிலிருந்து மது கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, நாகை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 35 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,830 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், மதுப்புட்டிகள், 5 இருசக்கர வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.