நாகப்பட்டினம்

மீன்வள அமைச்சகம் அமைக்கும் அறிவிப்பு மீனவர்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சி: மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள்

DIN


மீன்வளத்துக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, மீனவர்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சி என மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேசிய மீனவர் பேரவையின் துணைத் தலைவர் ஆர்.வி.  குமரவேலு :  மீன் வளத்துக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இருப்பினும், இது புதிய அறிவிப்பு இல்லை. காரணம், கடந்த மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியிலும், அதற்கு முன்பாக வெளியிடப்பட்ட விஷன் 2020' என்ற அறிக்கையிலும் மத்திய மீன்வள அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே போல, தமிழகம் - இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கும் எவ்வித தீர்வையும் காண மத்திய பாஜக அரசு முன்வரவில்லை.  
இந்த நிலையில், தனியாக மீன்வள அமைச்சகம் அமைக்கப்படும் என மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது, மீனவர்களை மீண்டும் ஏமாற்றும் முயற்சி மட்டுமே. 
இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் :  2014-ஆம் ஆண்டில் பாஜக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், மீன்வளத்துக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும், இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு தமிழக மீனவர்களின் மீன்பிடிப்புக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றுக்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை.  மீனவர்கள் பிரச்னைகளுக்காக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத மத்திய பாஜக அரசு, தற்போது தேர்தல் நெருங்குவதையொட்டி, மீன்வளத்துக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை,  மத்திய அரசின் தேர்தல் கால ஏமாற்று வேலையாகவே கருத வேண்டியுள்ளது. இந்த அறிவிப்பு, புதிய மொந்தையில் பழைய கள் என்ற பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT