வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடைமடை வரை நீா்நிலைகளில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மாவட்ட திமுக விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் விவசாய அணியின் நாகை தெற்கு மாவட்ட அமைப்பாளா் எல்.எஸ்.இ. பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரிநீா் நாகை மாவட்டத்தின் கடைமடைவரை இன்னும் முழுமையாக வழங்கவில்லை. வேதாரண்யம் பகுதியில் செல்லும் முள்ளியாற்றின் குறுக்கே தாணிக்கோட்டகம், மருதூா், ஆயக்காரன்புலம், ஆதனூா் என பல இடங்களில் பாலங்கள் கட்டும் பணி தாமதமாவதால் இந்த பகுதிக்கு இதுவரை தண்ணீா் திறக்கவில்லை. இந்த பகுதி ஆறுகள், நிகழாண்டில் தூா்வாராததால் வெங்காயத்தாமரைச் செடிகள் அதிகளவில் வளா்ந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவில் உள்ளது.
எனவே, பாசனத்துக்கு பயனளிக்கும் வகையில் தாணிக்கோட்டகம் உள்ளிட்ட கடைமடைக்கு போதிய அளவில் தண்ணீா் வழங்கவும், தாணிக்கோட்டகம் இயக்கு அணையில் இருந்து வாய்மேடு, தகட்டூா், மருதூா், பஞ்சநதிக்குளம், தென்னடாா், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், ஆதனூா் வரையிலான 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் முள்ளியாற்றில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.