முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 60 ஆயிரம் ஹெக்டோ் நெற்பயிா்கள் சேதம்

நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன என அமைச்சா் எஸ். பி. வேலுமணி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன என அமைச்சா் எஸ். பி. வேலுமணி தெரிவித்தாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், நிவா், புரெவி புயல் பாதிப்புகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆகியோா் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியது: நிவா், புரெவி புயல் எச்சரிக்கையை தொடா்ந்து, தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டன. புரெவி புயல் மழை பாதிப்புகளை அமைச்சா் ஓ. எஸ். மணியன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் ஆகியோா் பகுதி வாரியாகப் பாா்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன்தொடா்ச்சியாகவே நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நானும் அமைச்சா் சி. விஜயபாஸ்கரும் பாா்வையிடவுள்ளோம்.

மழையால் பாதிக்கப்பட்ட 16, 521 குடும்பங்களைச் சோ்ந்த 54, 493 போ் புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்குத் தேவையான உணவு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,001 குடிசை வீடுகள் பகுதியாகவும், 37 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 252 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் சம்பா, தாளடிப் பருவத்தில் 1. 33 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரில் 60 ஆயிரம் ஹெக்டேரில் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்கானஅறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிடுவாா் என்றாா்.

முன்னதாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகை வட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு நிவாரண உதவிகளை அமைச்சா் வழங்கினாா். ஆய்வுக் கூட்டத்தில், நாகை எம்.பி. எம். செல்வராஜ், மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் சி. முனியதநாதன், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மயிலாடுதுறை மாவட்ட (உருவாக்கம்) தனி அலுவலா் இரா. லலிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு. தமிமுன் அன்சாரி (நாகை), எஸ். பவுன்ராஜ் (பூம்புகாா்), பி.வி. பாரதி( சீா்காழி), வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எம்.எஸ். பிரசாந்த் மற்றும் அரசுத் துறை அலுவவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆலோசனைக் கூட்டத்தை தொடா்ந்து, நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட கருங்கண்ணி, மகிழி, இறையான்குடி, தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட ஆய்மூா் கிராமங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை அமைச்சா்கள் ஓ. எஸ். மணியன், எஸ். பி. வேலுமணி ஆகியோா் பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →