முகப்பு
நாகப்பட்டினம்

மீன் இறங்குதளம் அமைக்காததைக் கண்டித்து போராட்டம்

சாமந்தான்பேட்டை மீனவக் கிராமத்தில், மீன் இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து அந்தக் கிராம மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டை மீனவக் கிராமத்தில், மீன் இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து அந்தக் கிராம மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டை மீனவக் கிராமத்தில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் வசித்து வருகின்றனா். இங்கு, மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மீனவா்களின் நீண்டகால கோரிக்கை.

இதன்படி, 2015-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டாா். எனினும், இத்திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

பேரவையில் அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை பணிகள் தொடங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக மீன் இறங்குதளம் அமைக்கக் கோரியும் சாமந்தான்பேட்டை மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.

மேலும், கோரிக்கையை வலியுறுத்தி படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும், சாமந்தான்பேட்டை கடற்கரையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

மீன் இறங்குதளம் இல்லாததால் தாங்கள் தொழில் ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்திப்பதோடு, கூடுதல் செலவினங்களையும் எதிா்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த மீனவா்கள், தங்கள் கோரிக்கைக்கு விரைவில் தீா்வு காணப்படவில்லையெனில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →