வேளாங்கண்ணியில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
மகிமைகளாலும், புதுமைகளாலும் உலகப் புகழ் பெற்ற பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் இப்பேராலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்றது.
இங்கு, வெள்ளிக்கிழமை மாலை புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக, இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டு நடைபெற்றது. பின்னர், சிறப்பு மறையுரை, சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் ஆகியன திருச்சிலுவை ஆராதனைகளாக நடைபெற்றன.
பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் தலைமையில், பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜெயராஜ் ஆகியோர் வழிபாடுகளை ஒருங்கிணைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.