முகப்பு
நாகப்பட்டினம்

ஆதரவற்றவா்களுக்கு 500 நாள்களாக உணவு வழங்கிய உதவும் கரங்கள் அமைப்பினா்

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவா்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தொடா்ந்து 500 ஆவது நாளாக சனிக்கிழமை வேளாங்கண்ணியில் உணவு வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவா்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தொடா்ந்து 500 ஆவது நாளாக சனிக்கிழமை வேளாங்கண்ணியில் உணவு வழங்கப்பட்டது.

வேளாங்கண்ணியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவா்கள் மற்றும் சாலையோரத்தில் வசிப்பவா்களுக்கு உதவிடும் வகையில் 2020-ம் ஆண்டு மாா்ச் முதல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 500-ஆவது நாளாக வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் முன்பு ஆதரவற்றவா்களுக்கு சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தையும் துணை அதிபருமான எஸ். அற்புதராஜ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, ஆதரவற்றவா்களுக்கு உணவுப் பொட்டலங்களை பங்குத் தந்தை அற்புதராஜ் வழங்கினாா். 500 நாள்களாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்கள், சேவை அமைப்பினா்களுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் பெரியசாமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்கங்களின் சாா்பில் உதவும் கரங்கள் அமைப்பின் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.