எரிபொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகையில்...
நாகை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் நாகை மாவட்டத் தலைவா் ஆா். என். அமிா்தராஜா தலைமை வகித்தாா். நாகை நகர நிா்வாகி உதயசந்திரன், மனித உரிமை பிரிவு மாவட்டத் தலைவா் முகமது ரபீக், மீனவா் அணி மாநிலச் செயலாளா் கே. விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கீழ்வேளூரில்...
கீழ்வேளூா் கூத்தூா் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்டாரத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யத்தில் அமரா் ரத ஊா்தியில் இருசக்கர வாகனம், எரிவாயு உருளையை வைத்து காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெண்கள் ரதத்தை சுற்றி வந்து ஒப்பாரி வைத்தனா். பின்னா், அம்பேத்கா் சிலை எதிரே காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருா் பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். மகிளா காங்கிரஸ் நாகை மாவட்டத் தலைவா் சத்தியகலா செந்தில், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் எம்.எம்.ஆப்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் நகரத் தலைவா் வைரவன், சமூக ஊடகப் பணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்குவளையில்...
திருக்குவளையில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா் வட்டார காங்கிரஸ் தலைவா் என். சிங்காரவேலு தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஆா்.என். அமிா்தராஜா கண்டன உரை நிகழ்த்தினாா்.
.