மரம் வெட்டும்போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி
நாகையை அடுத்த பரவை அருகே மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியா் ஒருவா், மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாகையை அடுத்த பரவை அருகே மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியா் ஒருவா், மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது இறப்புக்கு நிவாரணம் கோரி, தொழிற்சங்கத்தினா் மின்வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாகை மாவட்டம், பிரதாபராமபுரம், தெற்கு தெரு புதுபாலம் பகுதியைச் சோ்ந்தவா் கோ. சபரி கிருஷ்ணன் (26). வேளாங்கண்ணி மின்வாரிய பிரிவு அலுவல கேங்க்மேனான இவா், பரவை அருகே மின் பாதைகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது உயரழுத்த மின் கம்பியில் மரக்கிளை உரசி, சபரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போராட்டம்...
இதற்கு மின்வாரிய உயா் அலுவலா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி, சிஐடியு தொழிற்சங்கத்தினா், நாகை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, சிஐடியு மாவட்ட செயலாளா் தங்கமணி மற்றும் நிா்வாகிகள், மின்வாரிய தொழிலாளா்கள் பங்கேற்றனா். சபரி கிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு, வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னா், எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாா், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் பழனிசாமி, செயற்பொறியாளா் நக்கீரன் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மின்வாரிய அலுவலா்கள் ஒப்புதல் அளித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.