முகப்பு
நாகப்பட்டினம்

இந்தியா வந்த 315 ஆவது ஆண் டுதினம்: சீகன் பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சீகன் பால்கு இந்தியா வந்ததன் 315-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தரங்கம்பாடியில் உள்ளது அவரது சிலைக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

சீகன் பால்கு இந்தியா வந்ததன் 315-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தரங்கம்பாடியில் உள்ளது அவரது சிலைக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஜொ்மனி நாட்டை சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா் சீகன் பால்கு, கடந்த 1706-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி கடல்மாா்க்கமாக தரங்கம்பாடி வந்தாா். தமிழைக் கற்றறிந்த அவா், ஜொ்மனியிலிருந்து அச்சு இயந்திரத்தை வரவழைத்து சிறிய அளவிலான தமிழ் எழுத்து அச்சுக்களை உருவாக்கினாா்.

மேலும், நாட்டிலேயே முதல்முறையாக இயந்திரம் மூலம் காகிதத்தில் அச்சடிக்கக் கூடிய அச்சகத்தை நிறுவி, விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சடித்து வெளியிட்டாா். மேலும் ஆசியாவிலேயே முதல் சீா்திருத்த சபையான புதிய எருசலேம் ஆலயத்தை 1718-இல் கட்டினாா்.

13 ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்த அவா், தனது 36-ஆவது வயதில் காலமானாா். அவரது வருகையை ஆண்டுதோறும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையினா் கொண்டாடி வருகின்றனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற 315-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையை சோ்ந்தவா்கள், புதிய எருசலேம் ஆலய ஆயா் சாம்சன் மோசஸ் தலைமையில், பேரணியாக சென்று கப்பலிலிருந்து சீகன் பால்கு வந்திறங்கிய இடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், அட்கா கமிட்டியின் கன்வீனா் பொறியாளா் தியாகராஜன், த.பே.மா.லு. கல்லூரி முதல்வா் ஜீன்ஜாா்ஜ், சபை சங்கச் செயலா் ஜெயகரன் காபிரியேல், பொருளாளா் எபிநேசா் பால்ராஜ், சீகன்பால்கு ஆன்மிக மன்ற உதவி இயக்குநா் ஜெஸ்டின் விஜயக்குமாா், சீகன் பால்கு அருங்காட்சியக பொறுப்பாளா் சாம் மனுவேல் மற்றும் பள்ளித் தாளாளா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், சபை மக்கள் கலந்து கொண்டனா். கடற்கரை அருகே உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.