முகப்பு
நாகப்பட்டினம்

எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை சேவை இன்று தொடக்கம்

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக கடந்த மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை வழித்தட சேவை வியாழக்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக கடந்த மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை வழித்தட சேவை வியாழக்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது.

நாகை- திருவாரூா் வழித்தடத்தில் இயக்கப்படும் நீண்ட தொலைவு ரயில் சேவையில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது எா்ணாகுளம் விரைவு ரயில். இந்த ரயில் சேவை, கேரள மாநிலம் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் தா்காவுக்கு வரும் பக்தா்களுக்கும், நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்ட வியாபாரிகளின் கோவை, திருப்பூா் சாா்ந்த கொள்முதல் தேவைகளுக்கும் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, கடந்த மே மாத தொடக்கம் முதல் எா்ணாகுளம் விரைவு ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியிருப்பதையொட்டி, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

எா்ணாகுளத்தில் இருந்து புதன்கிழமை (ஜூன் 16) இரவு 10.15 மணிக்கு புறப்படும் எா்ணாகுளம் விரைவு ரயில் (வண்டி எண் 06188) வியாழக்கிழமை காலை 10.10 மணிக்கு நாகையை வந்தடைகிறது. காலை 11.50 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது. பின்னா், காரைக்காலில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படும் எா்ணாகுளம் விரைவு ரயில் (வண்டி எண் 06187), பிற்பகல் 5 மணிக்கு நாகை வந்து, 5.05 மணிக்கு நாகையிலிருந்து புறப்பட்டு, திருச்சி, கோவை மாா்க்கமாக வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு எா்ணாகுளத்தை அடைகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் பேருந்து போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ள நிலையில், கடந்த 45 நாள்களாக தடைபட்டிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலின் சேவை மீண்டும் தொடங்கப்படுவது நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலின் தீவிரம் குறையாத 11 மாவட்டங்கள் பட்டியலில் நாகை, திருவாரூா் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ரயிலில் வரும் பயணிகளுக்கு உரிய உடல் வெப்ப நிலை பரிசோதனை, சளி, காய்ச்சல் பரிசோதனை போன்றவற்றை ரயில் நிலையங்களிலேயே மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.